Sunday, November 4, 2012

கணினி வழித்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம்


   டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்து வரும் சீர்திருத்த திட்டங்களின் வரிசையில், அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வு முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 9ம் தேதி நடக்கும் தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட, நான்கு பதவிகளுக்கான தேர்வுகள், இந்த முறையில் நடக்கும் என, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் அறிவித்துள்ளார்.

   இதுதொடர்பாக உதயசந்திரன் கூறியதாவது: தேர்வுக்கான ஆண்டு திட்டம், இணையவழி விண்ணப்பம், இணையவழி நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு மையங்களில் வீடியோ பதிவு கண்காணிப்பு முறை, "கீ-ஆன்சர்' வெளியிடுதல், இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு, பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு என, பல்வேறு சீர்திருத்தங்கள், போட்டித் தேர்வு முறைகளில் செய்யப்பட்டுள்ளன.
   இதன் அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வுகளை நடத்த, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, தோட்டக்கலை அலுவலர் - 94 பணியிடங்கள், உதவிப் பொறியாளர் - தானியங்கி ஊர்திகள் - 1 பணியிடம், முதுநிலை ஆசிரியர் - 3 பணியிடங்கள், பள்ளி உதவி ஆசிரியர் - 3 பணியிடங்கள் ஆகிய பதவிகளுக்கு, டிசம்பர் 9ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
  தற்போது நடைமுறையில் உள்ள, "ஓ.எம்.ஆர்.,' விடைத்தாளில் விடை அளிக்கும் கொள்குறி வகை தேர்வு போன்றது. தேர்வர்கள், குறித்த நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்ததும், திரையில் கேள்விகளும், பதில்களும் தோன்றும். கேள்விகளை படித்து, நான்கு விடைகளில், சரியான ஒரு விடையை தேர்வு செய்து, "மவுஸ்' மூலம், "கிளிக்' செய்ய வேண்டும்; அவ்வளவு தான்.விடைகளை மறு ஆய்வு செய்யவும், மாற்றவும், ஒரு கேள்வியை விடுத்து, அடுத்த கேள்விக்குச் செல்லவும், வழி வகை செய்யப்பட்டுள்ளது.
   கேள்விகளும், விடைகளும் வரிசை முறையின்றி கலந்து, தேர்வர்களுக்கு, கணினி திரையில் தோன்றச் செய்வதால், ஒரு தேர்வர், அருகில் இருக்கும் மற்றொரு தேர்வரை பார்த்து, விடை அளிக்க முடியாது. மேலும், தேர்வர்களின் நடவடிக்கைகள், கேமரா வழியாக கண்காணிக்கப்படுவதால், இந்த தேர்வு முறை மிகவும் நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
இந்த வகை தேர்வுகளில், விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்ய வேண்டிய வேலை இல்லை. அதனால், தேர்வு முடிவுகள், விரைவில் வெளியாகும். இந்த தேர்வை எழுத, அதிகமான கணினி அறிவு தேவையில்லை. "மவுசை' பயன்படுத்தி, விடைகளை, "கிளிக்&' செய்ய தெரிந்திருந்தால் போதும். 
  தேர்வு முடிந்ததும், தேர்வர்கள், தாங்கள் சமர்பித்த விடைகளின் விவரங்களை, "பிரின்ட்' செய்து கொள்ளலாம்.* இந்த வகை தேர்வுக்கு, தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக, தேர்வாணைய இணையதளத்தில், மாதிரி தேர்வு பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, தேர்வர்கள் தயாராகலாம். டிசம்பர் 9ல் நடக்கும் தேர்வுக்கு, வரும் 23ம் தேதி வரை, இணையதளம் (www.tnpsc.tn.nic.in) வழியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
Previous Post
Next Post

0 Comments: