Friday, October 12, 2012

2011- சமீப நிகழ்வுகள் ( ஜனவரி 29 முதல் 30 வரை )



ஐடிபிஐ வங்கி நிகர லாபம் உயர்வு
ஐடிபிஐ வங்கி நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.454 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ஜன. 29)

அதிமுக எம்எல்ஏ திமுகவில் சேர்ந்தார்
ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு, ஜனவரி 29ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்று கோபாலாபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி அவர்களை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார்.

ஓஎன்ஜிசி லாபம் உயர்வு
பொதுத்துறையைச் சேர்ந்த ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 7,083 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 132 சதவீதம் அதிகமாகும். இயற்கை எரிவாயு நடப்பு நிதியாண்டின் 9 மாதத்தில் நிகர லாபம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. 9 மாதங்களில் எரிவாயுவிற்கு வழங்கிய மானியம் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது என இதன் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஆலோசகராக ராமதுரை நியமனம்
பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் ஆலோசகராக டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எஸ். ராமதுரை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆற்றல் மேம்பாடு குறித்த விஷயங்களை பிரதமருக்கு ஆலோசனை வழங்குவார். (ஜன. 29)

அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
தமிழர்களுக்கு எதிராக இலங்கை ஓராண்டிற்கும் மேலாக நடத்திய இனப் படுகொலையை கண்டித்து, தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு (டிஏஜி) சார்பில் வாஷிங்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் புரூஸ் வெய்ன் அவர்கள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனித துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜன. 29)

மாருதி சுஸுகி லாபம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் மாருதி சுஸுகி ரூ.565.17 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 687.53 கோடியாக இருந்தது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மீது வழக்கு பதிவு
மகாராஷ்டிராவின் கொலாபா பகுதியில் கடற்படை தளம் அருகே கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி கட்டட (31 அடுக்கு மாடி) வழக்கில் அப்போதைய முதல்வர் அசோக் சவான் உட்பட 31 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஜன. 29)

ஸ்வாதி புரஸ்காரம் விருது - 2011
இந்திய இசைக்காக கேரள அரசு நிறுவியுள்ள "ஸ்வாதி புரஸ்காரம்" எனும் உயரிய விருதுக்கு பிரபல பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருது கர்நாடக இசை வல்லுநராக இருந்த திருவிதாங்கூர் மன்னர் ஸ்வாதி திருநாளின் பெயரில் நிறுவப்பட்டது.

ஹிலாரி கிளிண்டன்-சிவசங்கர் மேனன் சந்திப்பு
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஹிலாரி கிளிண்டனை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அவர்கள் சந்தித்துப் பேசினார். (ஜன. 29)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 2011
மகளிர் ஒற்றையர் பிரிவு - ஜன. 29ஆம் தேதி மெல்பேர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை கிளிஸ்டர்ஸ் சீன வீராங்கனை லி நா-வை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். இது இவருக்கு 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். (யு.எஸ். ஓபன் பட்டம் - 2005, 2009, 2010) ஆடவர் ஒற்றையர் பிரிவு - ஜன. 30ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே-வை 6-4, 6-2, 6-3 என்ற செட் கண்க்கில் வீழ்த்தி 2வது முறையாக பட்டம் வென்றார். (முதல் பட்டம் வென்ற ஆண்டு 2008). ஆண்கள் இரட்டையர் பிரிவு - ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க ஜோடி (பாப் பிரையன்-மைக் பிரையன்) இந்திய ஜோடியை (பயஸ்-பூபதி) வீழ்த்தி பட்டம் வென்றது.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு ஆதாரங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 2007ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரசில் (இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும்) நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசாரணை முடிந்ததும், பாகிஸ்தானிடம் இது தொடர்பாக சில விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார். (ஜன. 30)

மகாத்மா காந்தி நினைவு தினம்
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 63வது நினைவு தினம் (ஜன. 30) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. டில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது.

எகிப்தில் கலவரம் மேலும் வலுப்பெற்றது
1981லிருந்து அதிபர் பதவி வகித்து வரும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் (82) பதவி விலக மறுத்த அவர், தனது அமைச்சரவையைக் கலைத்தார். இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற எகிப்து பிரமீடுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ம.பி.யில் நக்சல் பெண் தலைவி கைது
மத்தியப் பிரதேசம் கிழக்கு பகுதியில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் உள்ள ரசிமதா கிராமத்தைச் சேர்ந்த ஜினியா புரம் (32) என்ற நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தளபதி போலீசாரால் ஜனவரி 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் 1994ல் நக்சல் இயக்கத்தில் சேர்ந்தவர்.

ரசாயன தொழிற்சாலைகள் விஷவாயு கசிவு - 4 பேர் பலி
உத்திரப்பிரதேசம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சான்டிலா பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலையில் "பென்சின் குளோரைடு"  விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஜன. 29)

ஓரியண்டல் வங்கி லாபம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் 3வது ஓரியண்டல் வங்கியின் நிகர லாபம் ரூ.408.25 கோடி. இது கடந்த ஆண்டை விட 41.05 சதவீதம் அதிகம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் தேர்வு
தமிழகத்தில் ஜனவரி 29ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் தேர்தலில் திரு. பிரபுதாஸ் (1520 ஓட்டுகள்) வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு அடுத்த இடத்தில் 1300 வாக்குகள் பெற்ற அருண் பிரசாத் 2வது இடம் பிடித்தார்.
Previous Post
Next Post

0 Comments: