சிரியா நாட்டில் ஓராண்டில் 19,106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மனித உரிமை அமைப்பு தகவல் மத்திய ஆசிய நாடான சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்ட ஓராண்டுகளில் இதுவரை 19,106 பேர் கொல்லப்பட்டனர். இதில் 13,292 பேர் பொதுமக்களும், 4861 பேர் அரசுக்கு ஆதரவாக போரிட்ட ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கிளர்ச்சி தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. ஜூலை 21ஆம் தேதி மட்டும் 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பின் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார். (ஜூலை 22). 100 கரன்சியை விட 50 கரன்சி அச்சடிக்க செலவு அதிகம் - RBI தகவல் அறியும் உ ரிமைச் சட்டத்தின் கீழ் ரூபாய் நோட்டுகள் குறித்த விவரத்தை கேட்டிருந்த ஒருவருக்கு - ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. இதன்படி, 1967லிருந்து ரூபாய் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. 5 அச்சடிக்க 0.47 பைசா செலவாகிறது. இதேபோன்று மற்ற நோட்டுகள் அச்சடிக்கும் செலவு - 10 - 0.96 பைசா; 20 - 1.46 ; 50 - 1.81 ; 100 - 1.79 ; 500 - 3.85 ; 1000 - 4.06 செலவாகிறது. 5, 50, 20, 50 நோட்டுகளின் ஆயுட்காலம் 100, 500, 1000 நோட்டுகளின் ஆயுட்காலத்தை விட குறைவாகும். சோதனை அடிப்படையில் 100 கோடி பிளாஸ்டிக்/பாலிமர் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, மைசூர், கொச்சி, ஜெய்பூர், சிம்லா மற்றும் புவனேஷ்வர் ஆகிய நகரங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதன் முடிவினை பொறுத்து மற்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. (ஜூலை 22) முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்வது தொடர்பான வழக்கு ஜூலை 23ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே. ஜெயின் அவர்கள் தலைமையில் நீதிபதிகள் திரு. ஆர்.எம். லோதா, திரு. தீபக் வர்மா, திரு. சந்திர மௌலி, திரு. கே.ஆர். பிரசாத், திரு. அனில் ஆர். தாவே ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன் ஜூலை 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பாப்டே, உமாபதி ஆகியோர் வாதாடுகையில், அணியின் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை கேரளா தடை செய்கிறது. பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நிபந்தனையுடன் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தனர். மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரி தலைமையில் தமிழக, கேரள பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்து. இதன்படி - அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் அணையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்தல், தண்ணீர் செல்லும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் செப்பனிடுதல், அணையின் மேல்பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல் அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும். வல்லக்கடவு பகுதியில் இருந்து முல்லைப் பெரியாறு அணை வரையிலான சாலைகள் செப்பனிடுதல், பேபி அணி பகுதியில் இடையூறாக உள்ள மரங்களை வெட்ட அப்புறப்படுத்துதல் ஆகிய 2 பணிகளையும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்று நிறைவேற்றலாம் என்று தீர்ப்பளித்தனர். ஈராக்கில் 18 நகரங்களில் தீவிரவாத தாக்குதல் - 107 பேர் பலி ஈராக்கில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 18 நகர்களில் மொத்தம் 27 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தியதில் 107 பேர் பலியாயினர். 214 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் பாக்தாத்தில் அரசு அலுவலகம் அருகே கார் குண்டு வெடித்ததில் மட்டும் 12 பேர் பலியாயினர். (ஜூலை 23) இந்தியன் வங்கி நிகர லாபம் உயர்வு நடப்பு நிதியாண்டின் (2012-13) ஏப்ரல்-ஜுன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டு ( 406.9 கோடி) இதே காலகட்டத்தை விட 13.4 சதவீதம் ( 461.7 கோடி) அதகரித்துள்ளதாக வங்கியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஜூலை 23) ஜெர்மன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார்பந்தயம் ஜெர்மனி கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் பெராரி அணி வீரர் பெர்னாண்டோ அலான்சோ (ஸ்பெயின்) முதலிடம் பிடித்தார். நடப்பு சீசனில் 3 போட்டியில் முதலிடம் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை அலான்சோ பெற்றார். ரெட்புல் அணி வீரர் செபாஸ்டியன் 2வது இடத்திலும், மெக்லாரன் அணியின் ஜென்சன் பட்டன் 3வது இடத்தையும் பிடித்தனர் அட்லாண்டா ஓபன் டென்னிஸ் - ரோடிக் பட்டம் வென்றார் அட்லாண்டா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் லக்சம்பர்க் வீரர் கில்லஸ் முல்லரை வீழ்த்தி பட்டம் வென்றார். (ஜூலை 23) கேப்டன் லட்சுமி சேகல் மறைவு சென்னையில் பிறந்த சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமி சேகல் அவர்கள் கான்பூரில் ஜூலை 23ஆம் தேதி காலமானார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். இவர் 1938ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். 1940ல் மேல்படிப்புக்கா சிங்கப்பூர் சென்றார். 1943ல் இந்தியா திரும்பியதும் நேதாஜி ராணுவப்படையில் சேர்ந்தார். பெண்களுக்கான ஜான்சி ராணி படைப்பிரிவில் கேப்டனாக பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த லட்சுமி அவர்கள், 1971ல் மாநிலங்களவை எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ல் பத்ம விபூஷண் விருது பெற்றார். 2002ல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை எதிர்த்து நின்று தோற்றவர். பருவமழை 22 சதவீதம் குறைந்தது இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட 22 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது. இது தமிழகத்தில் 17 சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 366.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 286.4 மி.மீ. மழை மட்டுமே பெய்திருப்பதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. 2011ல் ஜுன் முதல் செப்டம்பர் வரை சராசரி மழை அளவு 886.9 மி.மீ. ஆனால் 901. 2 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு குறைவான மழை பெய்த ஆண்டு - 1972 - 24 சதவீதம், 1978 - 25 சதவீதம், 2009 - 22 சதவிதம் என அறிவித்துள்ளது. உலகின் மிக உயரமான பகுதிக்கு பஸ் சேவையை தொடங்கியது சீனா உலகின் மிக உயரமான பகுதிக்கு சீனா பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள “பூமியின் கூரை” என அழைக்கப்படும் திபெத்தின் மிக உயரமான பகுதி என்காரி. இது கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் உள்ளது. என்காரி குக்கிராமங்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதிக்கு சீன அரசு 6 பஸ்களை தினமும் இயக்கத் துவங்கியுள்ளது. சென்கி சாங்போ என்ற நகரிலிருந்து மூன்று தடங்களில் என்காரி-க்கு பஸ் இயக்கப்பட உள்ளது. ஏற்கெனவே திபெத் தலைநகர் லாசா-வுக்கும் சென்கி சாங்போ நகருக்கும் இடையே நெடுஞ்சாலை அமைக்கபட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பஸ் போக்குவரத்திற்கு உள்ளூர் வர்த்தகர்கள் மூலம் 2 கோடி ரூபாய் திரட்டப்பட்டு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் புதிய பிரதமர் நியமனம் எகிப்து நாட்டின் புதிய பிரதமராக ஹேசாம் கண்டில் அவர்களை நியமனம் செய்து அதிபர் முகமது முர்சி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். (ஜூலை 24) 4 மண்டலங்களில் தொலைத்தொடர்பு சேவையை கைவிடுகிறது யுனிநார் நார்வே அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் டெலிநார். இது இந்தியாவின் கட்டுமான நிறுவனமான “யுனிடெக்” இணைந்து “யுனிநார்” என்ற பெயரில் செல்போன் சேவைக்கான உரிமைகளை பெற்றது. யுனிநாரில் டெலிநார் நிறுவனத்திற்கு 67.25 சதவீத பங்குகள் உள்ளன. இந்தியாவில் 13 மண்டலங்களில் செல்போன் சேவையை யுனிநார் நிறுவனம் உரிமம் பெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் சேவையை தொடங்கியது. 2008ஆம் ஆண்டு நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 122 உரிமங்களை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஒடிஷா மாநிலங்களில் தனது சேவையை கைவிட்டு மற்ற 9 மண்டலங்களில் (உ.பி. (கிழக்கு), உ.பி. (மேற்கு), பீகார், ஜார்கண்ட், கொல்கத்தா, மேற்குவங்காளம், குஜராத், மும்பை, மகாராஷ்டிரா, கோவை மற்றும் ஆந்திரா) அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக டெலிநார் குழும தலவர் ஜான் பெட்ரிக் பக்சாஸ் அவர்கள் செய்தியாளர்களுக்கு ஜூலை 24ஆம் தேதி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அசாமில் இனக்கலவரம் - 40 பேர் பலி அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டம் ஜெயபூர் கிராமத்தில் வங்கதேச முஸ்லிம் அதிகம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள போடோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர் அணி தலைவர்கள் இருவர் மீது ஜூலை 20ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கு இரு பிரிவினர் இடையே பயங்கர கலவரம் மூண்டது. இது அருகில் உள்ள சிராங், துப்ரி, பொங்கைகான், உதல்குரி ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியது. 70 வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வீடுகளை விட்டு வெளியேறிய 50 ஆயிரம் பேர் 75 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெற்ற கலவரங்களில் 40 பேர் பலியாகியுள்ளனர். கோக்ரஜார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளால் வடகிழக்கு எல்லையில் இருந்து புறப்படும் ரயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவன நிகர லாபம் அதிகரிப்பு விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி அவர்கள் நிறுவனத்தின் நிதிநிலை குறித்து பெங்களூருவில் ஜூலை 24ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-13ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜுன்) விப்ரோவின் நிகர லாபம் 1580 கோடி. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 18.37 சதவீதம் அதிகம் என்றார். கனரா வங்கியின் நிகர லாபம் அதிகரிப்பு 2012-13ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜுன்) கனரா வங்கியின் நிகர லாபம் 775 கோடி என வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எஸ். ராமன் அவர்கள் பெங்களூரில் நிதிநிலை அறிக்கை வெளியிட்டபோது தெரிவித்தார். (ஜூலை 24). கானா அதிபர் மறைவு மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கானா நாட்டின் அதிபர் அட்டா மில்ஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் ஜூலை 24ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அந்நாட்டு அரசியல் சாசனப்படி துணை அதிபராக உள்ள ஜான் டிராமனி மஹாமா அவர்கள் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். 4 இந்தியர்கள் உள்ளிட்ட 96 விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் விருது அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் சிறந்த சேவை, புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படும் அமெரிக்க அதிபர் விருதை ஜூலை 24ஆம் தேதி அதிபர் ஒபாமா அவர்கள் வழங்கினார். இவ்விருது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த (ஸ்ரீதேவி வேதுலசர்மா, பவனி சின்கா, பராக் ஏ. பதக் மற்றும் பிஜு பரக் காடன்) 4 பேர் உட்பட 96 விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கினார். இவ்விருது 1996ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. |
2012- சமீப நிகழ்வுகள் - ஜூலை 23 முதல் 24 வரை
Tags:
2012 சமீப நிகழ்வுகள்
0 Comments:
Post a Comment