Friday, October 12, 2012

2012- சமீப நிகழ்வுகள் - ஜூலை 25 முதல் 29 வரை

2012- சமீப நிகழ்வுகள் - ஜூலை 25 முதல் 29 வரை


13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்பு
நாட்டின் 13வது குடியரசு தலைவராக ஜூலை 25ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜி அவர்கள் காலை 11.35 மணிக்கு கடவுளின் பெயரால் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு பதவியேற்பு பதிவேட்டில் கையெழுத்திட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரோஷ் ஹோமி கபாடியா அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் திரு. மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் திரு. சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரதிபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவை தலைவர் திரு. மீரா குமார், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

குடியரசு தலைவர் உரை
- பதவியேற்றதும் ஜனாதிபதி முகர்ஜி அவர்கள் உரையாற்றியதாவது, அரசியில் சட்டத்தில் பாதுகாவலனாக செயல்படுவதுதான் குடியரசுத் தலைவரின் முதல் கடமை. நாட்டின் நலனுக்காக சேவையாற்றுதல் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் பாரபட்சமில்லாமல் நடுநிலையில் செயல்படுவேன். நாட்டின் வளர்ச்சி உண்மையானதாக இருக்க வேண்டும் என்றால், வளரும் இந்தியாவில் ஒரு அங்கமாக நாமும் இருக்க வேண்டும். வறுமை என்ற கொடுமையை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. நவீன இந்தியாவின் அகராதியில் இருந்து வறுமை என்ற சொல்லை அகற்ற வேண்டும். ஊழல் என்பது ஒரு பேய். நாட்டின் வளர்ச்சியை அது கெடுத்துவிடும். சில பேராசைக்காரர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதத்திற்கு எதிரான 4வது உலகப்போர் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

அரசியலில் பிரணாப்
- 1).1969ல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். 2).1978ல் கங்கிரஸ் பொருளாளராக பதவி வகித்தார். 3). 1980-85ல் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 4).கருத்து வேறுபாடு காரணமாக 1986ல் ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சி தொடங்கினார். 5).1989ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கட்சியை இணைத்தார். 6).1991-96 வரை திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தார். 7).இந்திராகாந்தி அமைச்சரவையில் வருவாய்த்துறை இணை அமைச்சரானார். 1982-84ல் நிதியமைச்சராக பதவி வகித்தார் (இந்த காலத்தில் மன்மோகன்சிங் அவர்கள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார்). 8). 1996க்குப் பிறகு 2004ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 2004, 2009 மக்களவை தேர்தலில் மேற்குவங்களாத்தில் உள்ள ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக மக்களவை உறுப்பினரானார். 2004ல் பாதுகாப்பு அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2008ல் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். 9).ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். 10). பல்வேறு துறை தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட 33 அமைச்சரவை குழுவுக்கு தலைமை வகித்தவர். 11). 1997ல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது பெற்றார். 12).மிக உயரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றவர்.

தமிழகத்தில் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

நாட்டின் தேசிய வனவிலங்கான புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், புலிகள் சரணாலயம் உள்ள இடங்களில் உள்ள கடைகள், கட்டடங்கள் உள்ளிட்ட வர்த்தகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வனவிலங்கு ஆர்வலர் அஜய்துபே அவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான உச்சநீதிமன்றம் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை (நெல்லை), ஆனைமலை (திருப்பூர், கோவை), முதுமலை (நீலகிரி) உள்ளிட்ட புலிகள் சரணாலயங்கள் ஜூலை 25 முதல் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. (ஜூலை 25)

கபில்தேவிற்கு பிசிசிஐ சலுகைகள்

இந்திய கிரிக்கெட் லீக்கிலிருந்து விலகிவிட்டதாக கபில்தேவ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் அவர்கள் கபில்தேவ் அவர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து சமரசம் ஏற்பட்டது. கபில்தேவ் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பிசிசிஐ ஜூலை 25ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து ஐபிஎல் போட்டியின்போது முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படும் பணப்பரிசுத் தொகை கபில்தேவுக்கு வழங்கப்படும். 100 டெஸ்ட் போட்டிகளுக்குமேல் விளையாடி இருப்பதால் அவருக்கு 1.5 கோடி (சிறப்பு ஊக்கத் தொகை) அளிக்கவும்,கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதாந்திர உதவித்தொகை 35 ஆயிரம் மீண்டும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. (2007ல் பிசிசிஐ-உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பை தொடங்கினார் கபில். இதன் பிறகே பிசிசிஐ ஐபிஎல் 2008ல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது).

மகசேசே விருது 2012

2012ஆம் ஆண்டிற்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான மகசேசே விருது (பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் விருது) ஜூலை 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த குழந்தை பிரான்சிஸ் (65) அவர்கள் இடம் பெற்றுள்ளார். இவர் கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சிறுதொழில் மூலம் வேலைவாய்ப்பு அளித்து அவர்கள் மேம்பாட்டுக்கு உழைத்து வருவதற்காக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் -
சென் ஷு சூ (தைவான்), ரோமுலோ டாவிடே (பிலிப்பைன்ஸ்), ஸ்யோடா ரிஸ்வானா ஹசன் (வங்கதேசம்), யாங் செய்ங் கோமா (கம்போடியா), அம்ப்ரோஷியஸ் ருவிண்ட்ரிஜார்டோ (இந்தோனேஷியா).

இந்திய பெண்மணிக்கு அமெரிக்க தேசிய கவுன்சில் உறுப்பினர் பதவி

அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ராணி ராமசாமி (தமிழகத்தை சேர்ந்தவர்) அவர்கள் உட்பட 6 பேரை தேசிய கவுன்சில் உறுப்பினராக அதிபர் ஒபாமா அவர்கள் நியமித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பிரச்சனைகளை எதிர்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருப்பார் என்று ஒபாமா அவர்கள் கூறினார்.

உலக அளவில் வெள்ளி உற்பத்தி - மெக்சிகோ முதலிடம்

2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி மதிப்புமிகு உலோகங்கள் இடம்பெற்றுள்ள வெள்ளி உற்பத்தியில் உலக அளவில் 15.28 கோடி அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் - 28.35 கிராம்) உற்பத்தியுடன் மெக்சிகோ முதலிடம் பிடித்துள்ளது. பெரு (10.98 கோடி அவுன்ஸ்), சீனா (10.39 கோடி அவுன்ஸ்), ஆஸ்திரேலியா (5.52 கோடி அவுன்ஸ்), சிலி (4.21 கோடி அவுன்ஸ்), போலந்து (4.8 கோடி அவுன்ஸ்), ரஷ்யா (4.0 கோடி அவுன்ஸ்), பொலிவியா (3.90 கோடி அவுன்ஸ்), அமெரிக்கா (3.60 கோடி அவுன்ஸ்), அர்ஜென்டினா (2.26 கோடி அவுன்ஸ்) ஆகிய நாடுகள் வெள்ளி உற்பத்தியில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பெய்ஜிங்கில் 60 ஆண்டுகளில் இல்லாத கன மழை - 77 பேர் பலி

சீனாவில் ஒரு வாரம் பெய்த கன மழைக்கு 77 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் ஜூலை 25ஆம் தேதி 21 செ.மீ. மழையும், ஜூலை 26ஆம் தேதி 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மழை என்று சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் பிராட்பேண்ட் 100 மடங்கு வேகம் அதிகரிப்பு கூகுள் அறிமுகம்
கற்பனைக்கும் எட்டாத வேகத்தில் வீடியோ மற்றும் படங்கள் பிரவுஸ் ஆகக் கூடிய "பைபர்" என்ற இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நொடிக்கு 1 ஜிகாபைட் வேகத்தில் இணையதளங்களை பார்க்க முடியும். அமெரிக்காவின் மிசவுரி மாநிலம் கன்சாஸ் நகரில் இந்த சேவை முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பிராட்பேண்ட் வேகத்தைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் செயல்படக்கூடியது. (ஜூலை 27)

நைஜீரியாவில் 2 இந்தியர்களை கொன்ற தீவிரவாதிகள் கைது

நைஜீரியாவில் போர்னோ மாநிலத்தின் மைடுகுரி என்ற பகுதியில் சங்கர் சாகா (35), போகுல் சந்தர் மோலண்டல் என்ற இரு இந்தியர்களை ஜூலை 25ஆம் தேதி கொடூரமாக கொலை செய்தனர். இவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட அந்நாட்டு சிறப்பு புலனாய்வு படைக்கு வந்த தகவல்படி மைடுகுரியில் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் 26 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஜூலை 28)

அசாம் மாநில மக்களின் மறுவாழ்விற்கு
300 கோடி ஒதுக்கீடு
அசாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜூலை 28ஆம் தேதி பார்வையிட்ட பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், மக்களின் மறுவாழ்விற்கு  300 கோடி மதிப்பிலான உதவிகளை அறிவித்தார். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி வழங்கப்படும் என்றும், கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு  50 ஆயிரம் அளிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழக்கதிர்பூர் கிராமத்தில் உள்ள 75 ஏக்கர் அரசு நிலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடான  83.83 கோடியில் 9 சதவீதம் தொகையான 7 கோடியே 54 லட்சம் மானியமாக தமிழக அரசு வழங்கும் என்றும், 14 கோடி மதிப்பீட்டில் 75 ஏக்கர் அரசு நிலத்தை வழங்குதவற்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு ஜூலை 28ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணி (டன்னல் போரிங் - இயந்திரத்தை கொண்டு சுரங்கம் தோண்டுதல்) நேரு பூங்காவில் ஜூலை 28ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் திட்டத் தலைவர் சுதீர் கிருஷ்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவில் 23 கி.மீ. நீளம் கொண்ட முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை - அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்க வழித்தடமாக அமைகிறது. 22 கி.மீ. உள்ள 2வது வழித்தடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சாலை முதல் அண்ணா நகர் 2வது அவென்யூ வரை சுரங்க வழித்தடமாக அமையவுள்ளது. மீதமுள்ள பகுதிகளை உயர்த்தப்பட்ட வழித்தடமாக அமைக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டன் வாழ் இந்தியருக்கு விருது

பிரிட்டன் வாழ் இந்தியர் ஹலித் ஹமீது-க்கு மருத்துவத் துறையில் சிறந்த பணிபுரிந்தமைக்காக லண்டன் நகர சுதந்திர விருது அளிக்கப்பட்டுள்ளது. லண்டன் நகர மக்களின் வாழ்க்கைக்காக சிறந்த சேவையாற்றி வருவதற்காக இவ்விருது லண்டன் நகர அரசு வழங்கி கௌரவிப்பதாக அறிவித்துள்ளது. (ஜூலை 29)

வண்டலூர் உயிரியல் பூங்கா - வயது 28

வண்டலூர் உயிரியல் பூங்கா நாட்டிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 1855ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மாசுபட்ட காற்று, இட நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் இந்த பூங்க வண்டலூர் காப்புக் காட்டில் 602 எக்டேர் பரப்பளவில் 7.3 கோடி ரூபாய் செலவில் மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டு முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இதனை அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். இப்பூங்கா தொடங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. இது தெற்காசியாவின் மிகப் பெரிய பூங்காவாகும்.

ஆப்கனில் சாக் மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சாக் மாகாணத்தின் கவர்னர் முகமது இஸ்மாயில் வாபா அவர்கள் ஜூலை 29ஆம் தேதி அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்து தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் கொல்லப்பட்டார்.

உலக அளவில் ஏற்றுமதி வளர்ச்சி - இந்தியா முதலிடம்

உலகில் பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றான இந்தியா 2011ல் 16.1 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி கண்டு உலக அளவில் முதலிடத்தை பிடித்தது. 2வது இடத்தில் 9.3 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியுடன் சீனா உள்ளது. 2010ல் 28.4 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 22 சதவீதத்துடன் இந்தியா 2வது இடத்திலும் இருந்தது. இது குறித்த செய்தி உலக வர்த்தக மையத்தின் 2012ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012- சமீப நிகழ்வுகள் - ஜூலை 29 முதல் 31 வரை

2012- சமீப நிகழ்வுகள் - ஜூலை 29 முதல் 31 வரை



மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை சோதனை ஒடிஷா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜூலை 29ஆம் தேதி ஏவப்பட்டது. இது 290 கி.மீ. இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் சரியான இலக்கை வெற்றிகரமாக தாக்கியது என் சோதனை மைய இயக்குநர் பிரசாத் அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச தரத்தில் நவீன நீச்சல்குளம்

நாமக்கல், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் சர்வதேச தரத்தில் நவீன நீச்சல் குளம் அமைக்க தலா   1 கோடி வீதம் மொத்தம் 2 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார் (ஜூலை 29).

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - 32 பேர் பலி

டெல்லியிலிருந்து ஜூலை 28ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில்வே ஸ்டேஷனை தாண்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் போது திடீரென எஸ்.11 பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தால் ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாலை என்பதால் அதிகமானோர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் புகை உணர்வை அறிந்த சிலர் உடனடியாக குதித்தனர். ஒரு சிலர் வழி தெரியாமல் புகை மற்றும் அதிக வெப்பம் காரணமாக தப்பிக்க வழியின்றி உடல் கருகி 32 பேர் உயிரிழந்தனர். 26 பேர் தீக்காயம் அடைந்தனர்.

அலெபோ நகரிலிருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்

சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்திற்கு ஆதரவாக ராணுவம் மற்றும் அதிபருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கிடையே நடைபெற்ற பயங்கர மோதலால் வர்த்தக நகரான அலெபோ-விலிருந்து 2 லட்சம் பேர் (மொத்தம் 30 லட்சம் மக்கள்தொகை கொண்டது) பக்கத்து நகரங்களை நோக்கி சென்றுவிட்டனர். பள்ளிகள், வெட்டவெளிகளில் தங்கியுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி கிராண்ட் பிரீ பார்முலா 1 - 11வது சுற்று
ஹங்கேரி கிராண்ட் பிரீ பார்முலா 1 கார்பந்தயம் (இந்த சீசனின் 11வது சுற்று) ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் மெக்லாரென் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை முடிந்துள்ள 11 சுற்றுகளின் முடிவில் பெராரி அணி வீரர் பெர்னாண்டோ அவான்சோ 164 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரெட்புல் ரெனால்ட் அணி வீரர் மார்க்வெப்பர் 124 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். (இன்னும் இந்த சீசனில் 9 சுற்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.)

7 மாநிலங்களில் 15 மணி நேர மின்வெட்டு

வடக்கு மண்டல தொகுப்பில் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஏற்பட்ட மின்தடை 15 மணி நேரத்திற்கு பிறகே மின்தடை நீங்கியது. இதனால் 7 மாநிலங்களில் (உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தராஞ்சல், இமாச்சலப் பிரதேசம்) இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில் சேவை 25 சதவீத ரயில் சேவை மட்டுமே நடைபெற்றது. ஆக்ரா அருகே மின் உற்பத்தி யூனிட்டில் ஏற்பட்ட பழுதே வடக்கு மண்டல தொகுப்பில் மின்தடை முடங்கியதற்கு காரணம் என செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐடி துறைகளில் ஆராய்ச்சி, வளர்ச்சி மையங்களுக்கான வரி விதிப்பை சீரமைக்க குழுவை அமைத்தார் பிரதமர்

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) மற்றும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, வளர்ச்சி மையங்களுக்கான வரி விதிப்பை சீரமைக்க மத்திய நேரடி வரிவிதிப்பு (சிபிடீடி) வாரியத் தலைவர் என். ரங்காச்சாரி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் நியமித்துள்ளார். இக்குழு வளர்ச்சி மையங்கள் மீதான வரி விதிப்புகளில் உள்ள குழப்பங்களை ஆய்வு செய்து ஆக. 31ஆம் தேதிக்குள் முதல் அறிக்கையை அளிக்கும் என்றும், முழு விதிமுறைகளும் டிச. 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதம அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (வரி ஏய்ப்பதை தடுப்பதற்காக பொது வரி ஏய்ப்பு தடுப்பு (ஜிஏஏஆர்) விதிகளை ஆய்வு செய்ய பார்த்தசாரதி ஷோம் அவர்கள் தலைமையிலான ஒரு குழுவை பிரதமர் ஏற்கெனவே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).

மணிலாவில் சபோலா புயல்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சபோலா என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிப் புயலுக்கு 10 பேர் பலியாயினர். 6 பேரை காணவில்லை. 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். டொர்னடோ எனப்படும் புழுதிப் புயலைப் போல சூறைக்காற்று வீசியதில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தன. மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் தைவான் கடல் பகுதியை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மணிலாவில் மொத்தம் 20 புயல்கள் தாக்கும் என்றும், தற்போது தாக்கியுள்ள புயல்7வது புயல் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். (சபோலா என்பது வியட்நாம், லாவோஸ் பகுதியில் காணப்படும் அரிய வகை பாலூட்டியாகும்).

அலகாபாத் வங்கி நிகர லாபம் அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் அரசுத் துறை வங்கியான அலகாபாத் வங்கியின் நிகர லாபம் 514 கோடி என்றும் இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.பி. துவா அவர்கள் தெரிவித்துள்ளார். (ஜூலை 30)

சிண்டிகேட் வங்கி நிகர லாபம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் 440 கோடி என்றும் இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 28.28 சதவீதம் அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மதுகாந்த் கிரிதார்லால் சங்வி அவர்கள் தெரிவித்துள்ளார். (ஜூலை 30)

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்கு நிதித்துறையும், மத்திய மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அவர்களுக்கு உள்துறையும், மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்களுக்கு கூடுதலாக மின்துறையும் ஒதுக்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஜூலை 31)

இந்தியாவில் 20 மாநிலங்களில் ஒரே நேரத்தில் மின்தடை

வடக்கு மண்டலம் (பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்), கிழக்கு மண்டலம் (மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிஷா, சிக்கிம்), வடகிழக்கு மண்டலம் (அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா) என 3 மின்தொகுப்புகள் மூலம் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த 3 மின்தொகுப்புகளும் ஜூலை 31ஆம் தேதி மதியம் 1 மணிக்கு திடீரென ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் 20 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ரயில் சேவை, போக்குவரத்து மற்றும் 60 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதுபோன்ற ஒரு பெரிய மின்தடை இதுவரை ஏற்பட்டதில்லை என்றும், இதுவே உலகின் மிகப் பெரிய மின்தடை என்று செய்திகள் கூறுகின்றன (15 மணி நேரத்திற்கு பின்பே மின்தடை சீரானது).

மின்தொகுப்புகள் குறித்த தகவல்கள் -
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்கள் தேவைக்கு ஏற்ப பிரித்து அளிக்கப்படுகிறது. இதற்காக வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு என 5 மின் தொகுப்புகள் (பவர் கிரிட்) உள்ளன. இவற்றில் தென்மண்டல தொகுப்பை தவிர மற்ற தொகுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தென்மண்டல தொகுப்பில் இருந்துதான் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்டவற்றிற்கு மின்சாரம் கிடைக்கின்றது. 5 மின் தொகுப்புகளையும் மத்திய அரசுக்கு சொந்தமான "பவர்கிரிட் கார்ப்பரேஷன்"   இயக்குகிறது. இந்த தொகுப்புகள் மூலம் நாடு முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெறும் மின் தொகுப்புகள் அவற்றை தேவைக்கேற்ப எல்லா இடங்களுக்கும் சப்ளை செய்கின்றன. சப்ளை-தேவை இடையே சமநிலை பின்பற்றப்பட்டால் மட்டுமே இந்த மின்தொகுப்புகள் சீராக இயங்கும். அப்படி இல்லாமல் ஏதாவதொரு மாநிலம் அதிக மின்சாரத்தை எடுத்தால் அந்த மின்தொகுப்பு முடங்கிவிடும். தற்போது மின்தொகுப்பு முடங்கியதற்கு காரணம் உ.பி. தனக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2.60 கோடி யூனிட் கூடுதலாக பயன்படுத்தியது, அரியானாவில் 1.3 கோடி யூனிட், பஞ்சாப் 52 லட்சம் யூனிட் என கூடுதலாக எடுத்துக் கொண்டதே இதற்கு காரணம்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தர் நியமனம்

அண்ணா பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தராக அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி டீன் காளிராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கார்ப்பரேஷன் வங்கி நிகர லாபம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 5.35 சதவீதம் அதிகம் என வங்கியின் தலைவர் அஜய் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாபம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லாபம் 233.44 கோடி என வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம். நரேந்திரா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காலாண்டு நிதிக்கொள்ளை - ஆர்பிஐ வெளியீடு

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2012-13ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் ஆர்பிஐ கவர்னர் டாக்டர் டி. சுப்பாராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (துணை கவர்னர்கள் - டாக்டர் கே.சி. சக்கரபர்த்தி, திரு. ஆனந்த் சின்ஹா, டாக்டர் சுபிர் கோகர்ன், திரு. எச்.ஆர். கான்). கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் குறுகிய கால கடன் வட்டி (ரெப்போ) 8 சதவீதம் நீடிக்கும். ஆர்பிஐ-யிடம் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு (சிஆர்ஆர்) 4.75 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைப்பு. யூரோ கரன்சி நாடுகள் நிதிநிலைமை தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி இடையே வர்த்தக பற்றாகுறை தொடர்ந்து பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆபத்தாக உள்ளது. நிதி புழக்கத்தை அதிகரிக்க ஓபன் மார்க்கெட் வர்த்தகம் தொடர வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அறிவித்தது. (ஜூலை 31).

சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி - ஜெர்மனி உலக சாதனை

சூரிய சக்தி மூலம் ஒரு மணி நேரத்தில் 22 ஜிகா வாட் மின்சாரம் (1 ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட்) உற்பத்தி செய்து ஜெர்மனி உலக சாதனை படைத்துள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் மையத்தின் தலைவர் நார்பர்ட் அல்நோச் அவர்கள் தெரிவித்துள்ளார். (ஜூலை 31)

புனேயில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் புனேயில் உள்ள தியேட்டரில் ஆக. 1ஆம் தேதி நடைபெற இருந்த விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார். கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்வது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் புனேயில் பால்கந்தர்வா தியேட்டர் வெளியே உள்ள சிலை அருகே ஒரு குண்டும், வங்கி, மெக்டொனால்டு கடை, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

2011- சமீப நிகழ்வுகள் ( ஜனவரி 29 முதல் 30 வரை )

2011- சமீப நிகழ்வுகள் ( ஜனவரி 29 முதல் 30 வரை )


ஐடிபிஐ வங்கி நிகர லாபம் உயர்வு
ஐடிபிஐ வங்கி நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.454 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ஜன. 29)

அதிமுக எம்எல்ஏ திமுகவில் சேர்ந்தார்
ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு, ஜனவரி 29ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்று கோபாலாபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி அவர்களை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார்.

ஓஎன்ஜிசி லாபம் உயர்வு
பொதுத்துறையைச் சேர்ந்த ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 7,083 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 132 சதவீதம் அதிகமாகும். இயற்கை எரிவாயு நடப்பு நிதியாண்டின் 9 மாதத்தில் நிகர லாபம் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. 9 மாதங்களில் எரிவாயுவிற்கு வழங்கிய மானியம் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது என இதன் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஆலோசகராக ராமதுரை நியமனம்
பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் ஆலோசகராக டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எஸ். ராமதுரை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆற்றல் மேம்பாடு குறித்த விஷயங்களை பிரதமருக்கு ஆலோசனை வழங்குவார். (ஜன. 29)

அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
தமிழர்களுக்கு எதிராக இலங்கை ஓராண்டிற்கும் மேலாக நடத்திய இனப் படுகொலையை கண்டித்து, தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு (டிஏஜி) சார்பில் வாஷிங்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் புரூஸ் வெய்ன் அவர்கள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனித துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக 3 கோடி டாலர் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜன. 29)

மாருதி சுஸுகி லாபம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் மாருதி சுஸுகி ரூ.565.17 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 687.53 கோடியாக இருந்தது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மீது வழக்கு பதிவு
மகாராஷ்டிராவின் கொலாபா பகுதியில் கடற்படை தளம் அருகே கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி கட்டட (31 அடுக்கு மாடி) வழக்கில் அப்போதைய முதல்வர் அசோக் சவான் உட்பட 31 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஜன. 29)

ஸ்வாதி புரஸ்காரம் விருது - 2011
இந்திய இசைக்காக கேரள அரசு நிறுவியுள்ள "ஸ்வாதி புரஸ்காரம்" எனும் உயரிய விருதுக்கு பிரபல பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் அவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருது கர்நாடக இசை வல்லுநராக இருந்த திருவிதாங்கூர் மன்னர் ஸ்வாதி திருநாளின் பெயரில் நிறுவப்பட்டது.

ஹிலாரி கிளிண்டன்-சிவசங்கர் மேனன் சந்திப்பு
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஹிலாரி கிளிண்டனை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அவர்கள் சந்தித்துப் பேசினார். (ஜன. 29)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 2011
மகளிர் ஒற்றையர் பிரிவு - ஜன. 29ஆம் தேதி மெல்பேர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை கிளிஸ்டர்ஸ் சீன வீராங்கனை லி நா-வை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். இது இவருக்கு 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். (யு.எஸ். ஓபன் பட்டம் - 2005, 2009, 2010) ஆடவர் ஒற்றையர் பிரிவு - ஜன. 30ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே-வை 6-4, 6-2, 6-3 என்ற செட் கண்க்கில் வீழ்த்தி 2வது முறையாக பட்டம் வென்றார். (முதல் பட்டம் வென்ற ஆண்டு 2008). ஆண்கள் இரட்டையர் பிரிவு - ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க ஜோடி (பாப் பிரையன்-மைக் பிரையன்) இந்திய ஜோடியை (பயஸ்-பூபதி) வீழ்த்தி பட்டம் வென்றது.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு ஆதாரங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 2007ஆம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரசில் (இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும்) நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசாரணை முடிந்ததும், பாகிஸ்தானிடம் இது தொடர்பாக சில விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றார். (ஜன. 30)

மகாத்மா காந்தி நினைவு தினம்
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 63வது நினைவு தினம் (ஜன. 30) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. டில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது.

எகிப்தில் கலவரம் மேலும் வலுப்பெற்றது
1981லிருந்து அதிபர் பதவி வகித்து வரும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் (82) பதவி விலக மறுத்த அவர், தனது அமைச்சரவையைக் கலைத்தார். இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற எகிப்து பிரமீடுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ம.பி.யில் நக்சல் பெண் தலைவி கைது
மத்தியப் பிரதேசம் கிழக்கு பகுதியில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் உள்ள ரசிமதா கிராமத்தைச் சேர்ந்த ஜினியா புரம் (32) என்ற நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தளபதி போலீசாரால் ஜனவரி 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் 1994ல் நக்சல் இயக்கத்தில் சேர்ந்தவர்.

ரசாயன தொழிற்சாலைகள் விஷவாயு கசிவு - 4 பேர் பலி
உத்திரப்பிரதேசம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சான்டிலா பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலையில் "பென்சின் குளோரைடு"  விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஜன. 29)

ஓரியண்டல் வங்கி லாபம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் 3வது ஓரியண்டல் வங்கியின் நிகர லாபம் ரூ.408.25 கோடி. இது கடந்த ஆண்டை விட 41.05 சதவீதம் அதிகம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் தேர்வு
தமிழகத்தில் ஜனவரி 29ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் தேர்தலில் திரு. பிரபுதாஸ் (1520 ஓட்டுகள்) வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு அடுத்த இடத்தில் 1300 வாக்குகள் பெற்ற அருண் பிரசாத் 2வது இடம் பிடித்தார்.